முறைகேடுகளை சுட்டிக் காட்டியதால், பழி வாங்கப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை தரக்கோரி, '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் சேவை செயல்பாட்டில் உள்ளது. இதை, ஜி.வி.கே., என்ற தனியார் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது; 3,600 ஊழியர் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக, ஆம்புலன்ஸ் சேவையில், முறைகேடுகள் நடப்பதாக, ஊழியர் சங்கம் குற்றம் சாட்டி வருகிறது. மேலும், 8 மணி நேரம் வேலை; கூடுதல் நேரத்திற்கு, கூடுதல் சம்பளம் போன்ற கோரிக்கைகளையும், ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, நேற்று, தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்; 200 பேர் பங்கேற்றனர்.
நிர்வாகத்தில், பல முறைகேடுகள் நடக்கின்றன. இதைச் சுட்டிக் காட்டியதாலும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும், 112 ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்; முறைகேடுகளற்ற, நேர்மையான நிர்வாகம் வேண்டும்; ஊழியர்களுக்கு விதிமுறைப்படி பயன்கள் கிடைக்க வேண்டும். இதற்காகவே, போராட்டம் நடத்துகிறோம். ஜெய்பிரகாஷ், ஆம்புலன்ஸ் ஊழியர் சங்க மாநில செயலர்
THANKS : http://www.dinamalar.com/district_detail.asp?id=1429260