Friday 9 March 2012

முதல்வரிடம் 108 ஆம்புலன்ஸ் சங்கம் சார்ப்பாக கோரிக்கை மனு அளிப்பு



அனுப்புநர்

            “108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு”
            கதவு எண்.21, நேதாஷி மெயின் ரோடு, முல்லை நகர்,
            மதுரை – 625002.

பெறுநர்

1.         உயர்திரு. சீப் ஆப்ரேடிங் ஆபிசர் (COO) அவர்கள்
G.V.K.இஎம்ஆர் ஐ 108 ஆம்புலன்ஸ் சேவை.

2.         உயர்திரு. திட்ட இயக்குனர் அவர்கள்,
சென்னை.

           
            பொருள் :       இஎம்டி , கால் சென்டர் ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்துடன்
பஞ்சப்படியும் சேர்த்து வழங்கவும் - சம்பள உயர்வும் உயர்த்தப்படும் சம்பளம் பணிமூப்பின் அடிப்படையில் உயர்த்தபடவும் - பேருந்து கட்டணத்திற்கு பஸ்பாஸ் வழங்கவும் - கோருதல் சம்பந்தமாக.

*******
                        நாங்கள் தங்களது 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் நாங்கள் மிகக்குறைவான சம்பளத்தில் மிகச்சிறந்த முறையில் ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றி வருகிறோம். மிகக் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான அவசர நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி மக்களிடையே 108  ஆம்புலன்ஸ் சேவைக்கு மதிப்பும், பிரபலமும் கிடைத்திருப்பதற்கு, இஎம்டி, பைலட் , கால்சென்டர் ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பே அடிப்படையான காரணம் என்பது தாங்கள் அறிந்ததே. மிகக் குறைவான சம்பளத்தில் உணவு இடைவேளை கூட இல்லாமல் 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை பார்த்து கஷ்டப்பட்டாலும் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற சேவை செய்கிறோம்   என்பது ஒன்றே எங்களுக்கு மன நிறைவைத்தரும் ஒன்றாகும். மற்றபடி வாங்கும் மிகக்குறைவான சம்பளமோ, 12-14 மணிநேர வேலையோ, OE, DM களின் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வசைச் சொற்களோ எங்களுக்கு மன நிறைவளிப்பதாக இல்லை.

            2.  விஷம்  போல்  அன்றாடம்  விலைவாசி ஏறிவரும் நிலையில் எங்களுக்கு அடிப்படைச் சம்பளமாக Rs.2,8,00- முதல் Rs.3,100/- வரை தான் வழங்கப்படுகிறது. சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பஞ்சப்படி எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. சிறப்பு படித்தொகை என்று வழங்கப்படும் தொகை வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் லோக்கேசனுக்குச் செல்வதற்கு ஆகும் பேருந்து கட்டணச் செலவிற்கே போதவில்லை. எனவே சமீபத்தில் ஏறியுள்ள அனைத்து அத்யாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வையும் பேருந்துக் கட்டண உயர்வுகளையும் கணக்கில் கொண்டும் சட்டப்படி சம்பளம் என்றால் அடிப்படைச் சம்பளத்துடன் பஞ்சப்படி (DA) யும் வழங்க வேண்டும் என்பதைக் கணக்கில் கொண்டும் நாங்கள் செய்யும் இதே ஆம்புலன்ஸ் சேவையைச் செய்யும் அரசு ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இணையான விதத்தில் அடிப்படைச் சம்பளத்தில் சம்பள உயர்வும் அதனுடன் சட்டப்படி உள்ள பஞ்சப்படியும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

3. அத்துடன் இதுவரை வருடாந்திர சம்பள உயர்வு வழங்கும்; போது சிலருக்கு கூடுதலாகவும் சிலருக்கு குறைவாகவும் உயர்த்தப்படுகிறது வழக்கமாக இருந்து வருகிறது. பல சமயங்களில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவருக்கு கூடுதலாகவும் பணி மூப்பு உள்ளவருக்கு குறைவாகவும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காரணம் கேட்ட போது வேலைச் செயல்பாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் (Performance) சம்பள உயர்வு வழங்கப்படுவதால் இவ்வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் தங்களின் வேலைச் செயல்பாடு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது, என்றோ  ஏன் குறைவாக சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றோ  அவரின்  எந்தச் செயல்பாடு குறைபாடுடையது. அவற்றைப் போக்க அவர் என்ன செய்ய வேண்டும் என்றோ, எந்த ஊழியருக்கும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை. இதனால் OE மற்றும் DM களுக்கு வேண்டியவர்கள், பிடித்தமானவர்களுக்கு கூடுதல் சம்பள உயர்வும், வேண்டாதவர்கள், பிடிக்காதவர்களுக்கு குறைவான சம்பள உயர்வும் வழங்கப்படுகிறது. அவ்வாறு பாரபட்சம் காட்டப்படுவதால் ஊழியர்களிடையே மனஸ்தாபங்களும் பரஸ்பரம் அவநம்பிக்கையும் சேவையில் உற்சாகக் குறைவும் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைப் போக்க வெளிப்படையான மதிப்பீட்டு முறையை புதிதாக அறிமுகப்படுத்தப் போவதாக மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் அவர்கள் முன்னிலையில் HR அவர்கள் வாக்குறுதியளித்தார். ஆனால் மூன்று  மாதங்களுக்கு மேலாகியும் அத்தகைய மதிப்பீட்டு முறை இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

4. இந்நிலையில் Performance Appraisal-க்கு தற்போது நடைமுறையில் இருக்கும் முறையைக் கை விட வேண்டும் என்றும் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவிருக்கும் வருடாந்திர சம்பள உயர்வு, பராபட்சம் எதற்கும் இடமளிக்காத விதத்தில் பணிமூப்பின் அடிப்படையில் ஒரே சீரான விகிதத்தில் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
           
  5. மேலும் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு இஎம்டி,பைலட்டும் தான் குடியிருக்கும் பகுதிக்கு அருகாமையில் ஆம்புலன்ஸ்  லொகேசன் இருந்தாலும் மாவட்டத்தின் எந்தப் பகுதிக்கும் சென்று வேலை பார்க்க நிர்பந்திக்கப்பட்டு வருகிறோம். ஆனால் தற்போது உயர்ந்திருக்கும் பேருந்துக் கட்டணத்தில் வீட்டிலிருந்து லொகேசன் சென்று வருவதற்கே நாளொன்றுக்கு Rs.30 முதல் Rs.80 வரை செலவாகிறது. நாங்கள் வாங்கும் மிகக்குறைந்த சம்பளத்தில் பெரும்பகுதி பேருந்துக் கட்டணத்திற்கே போய்விடுகிறது. சென்னையில் மட்டும் அச்செலவில் ஒரு பகுதி படித்தொகையாக தரப்படுகிறது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இஎம்டி,பைலட்டுகளுக்கு அவர்கள் வீட்டிலிருந்து லொகேசன் சென்றுவர நிர்வாகத்தின் செலவில் பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
           
            எனவே அரசாங்கம் தனது நிதியில் இருந்து மக்களுக்கு வழங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்திற்கான முகமைகளாக (Agency) மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் இஎம்டி,பைலட்,கால் செண்டர் ஊழியர்களுக்கு, 

                        அ.       அடிப்படைச் சம்பளம் மட்டும் வழங்கப்பட்டு வரும் தற்போதைய நடைமுறையை மாற்றி அடிப்படைச் சம்பளத்துடன் பஞ்சப்படியும் வழங்க வேண்டும் என்றும்,
                       
                        ஆ.       இதே போன்ற ஆம்புலன்ஸ் சேவையில் இருக்கும் அரசு ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இணையான விதத்தில் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும்,


                       இ.       சம்பள உயர்வில் தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும் செயல்பாட்டை மதிப்பிடும் ரகசிய முறையை கைவிட வேண்டும் என்றும், பணிமூப்பின் அடிப்படையில் பாரபட்சம் இன்றி சீரான சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும்,

                     ஈ.        வாங்கும் குறைந்த சம்பளத்திலும் வேலைக்கு வந்து போக ஆகும் பேருந்துக் கட்டணச் செலவிற்கே கணிசமான பகுதி செலவாகி விடுவதை கணக்கில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பணியாளர்களுக்கும் நிர்வாகத்தின் செலவில் பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

            இதன் மூலம்  மக்களின் உயிர்காக்கும் சேவையாகிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சனையை தீர்த்து சேவை இன்னும் சிறப்பாக நடைபெற  உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


இடம்: மதுரை                                                                                                           இப்படிக்கு,
நாள் :                                                                                                  தங்களின் உண்மையுள்ள 




                                                                                                     மாநில அமைப்புச் செயலாளர்

நகல் :

            மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிப்பிரிவு           
             செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
            தலைமைச் செயலகம்,
            சென்னை.

No comments:

Post a Comment