Tuesday, 7 January 2014

ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு -108 ஆம்புலன்ஸ் நாளை ஓடுமா?


ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்துகின்றனர்.தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் பைலட் (ஆம்புலன்ஸ் டிரைவர்) மருத்துவ உதவியாளர்கள் (இ.எம்.டி) மற்றும் கால் சென்டர் ஊழியர்களில் பெரும்பான்மையானவர்களை உறுப்பினர்களாக கொண்டு ‘தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம்‘ இயங்குகிறது. இச்சங்கத்தினர், 12 மணி நேர வேலைக்கு பதில் 8 மணி நேரம் வேலை, சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.இந்நிலையில் ஜனவரி 8ம் தேதி இரவு 8 மணி முதல், 9ம் தேதி இரவு 8 மணி வரை 24 மணி நேர போராட்டத்தை ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

இதுபற்றி சங்க மாநில அமைப்பு செயலாளர் பால்கண்ணன் கூறியதாவது:33 கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை எந்த முடிவும் அறிவிக்கவில்லை. எங்களுக்கு தற்போது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியவில்லை. இதுவரை எங்களது கோரிக்கையை ஏற்காததால் போராட்டம் அறிவித்து உள்ளோம். இதில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள். தமிழகம் முழுவதும் 620 ஆம்புலன்ஸ்கள் நாளை ஓடாது. இதற்கு பிறகும் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம், சாகும் வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு பால்கண்ணன் கூறினார்.108 ஆம்புலன்ஸ் சேவை ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஸ்டிரைக் காரணமாக விபத்து மீட்பு மற்றும் உயிர் காக்கும் பணியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment