
போதிய ஆட்கள் கிடைக்காததால் ‘108’ சேவைக்கு கூடுதலாக வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை இணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை அளிக்கும் வகை யில் 108 சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை யில் தமிழகத்தில் மொத்தம் 470 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தமிழக அரசும், ஜி.வி.கே இஎம்ஆர்ஐ நிறுவனமும் இணைந்து இந்த சேவையை அளித்து வருகின்றன. இதை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றை 108 சேவையில் இணைக்கும் நிகழ்ச்சி 19ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து 108 சேவையில் உள்ள உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டதுமே இதற்காக 500 புதிய பணியாளர்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து விளம்பரமும் செய்யப்பட்டது. டிரைவர் வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 25 முதல் 35க்குள் இருத்தல் வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் இருத்தல் வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் வேண்டும். 12 மணி நேர ஷிப்ட் முறையில் பணியாற்றும் டிரைவர்களுக்கு மாத ஊதியமாக 6800 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதே போல மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி நர்சிங் அல்லது 12ம் வகுப்புக்கு பிறகு 2 ஆண்டுகள் என்ற வகையில் ஜி.என்.எம் அல்லது ஏ.என்.எம் படிப்பு படித்திருக்க வேண்டும். அவர்களுக்கு
ரூ.7450 சம்பளம், மருத்துவ உதவியாளருக்கு (பயிற்சி நிலை)
ரூ.6 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஆட்சேர்ப்பு முகாம் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையில் நடந்து வருகிறது. முதல் நாளில் 4 டிரைவர்களும் 10 மருத்துவ உதவியாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மறுநாள் 40 பேர் வரை தேர்வு செய்யப்பட்டனர்.
ஒருவாரம் வரை நடத்தப்பட்ட இந்த நேர்முகத்தேர்வில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவில் ஆட்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து 19ம் தேதி நடப்பதாக இருந்த அரசு விழா ரத்து செய்யப்பட்டு வரும் 1 ம் தேதி அல்லது முதல்வர் ஒப்புதல் அளிக்கும் தேதிக்கு விழா மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால் புதிய ஆம்புலன்ஸ்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment