Friday 26 July 2013

இயற்கை நீதிக் கோட்பாட்டை கேலிக் கூத்தாக்குவதை எதிர்த்து போராட்டக் களம் புகுவோம்

நமது சமூகம் இரு பிரிவுகளாக செங்குத்தாக பிளவுபட்டுள்ளது. அவற்றில் ஒன்று உடைமை வர்க்கமாகவும் மற்றொன்று உழைக்கும் வர்க்கமாகவும் உள்ளது. நமது அரசும் அதன் நிர்வாகமும் உடைமை வர்க்கத்தின் கைப்பாவைகளாகச் செயல்படுகின்றன. உடைமை வர்க்கத்தின் கைவசம் உள்ள பணம் பாதாளம் வரை பாயும் தன்மை வாய்ந்ததாக இருப்பதால் அது தான் நினைத்ததையெல்லாம் சாதிக்கவல்லதாக உள்ளது. இது ஒளிவுமறைவான விசயமல்ல. இது நம் அனைவரின் அன்றாட அனுபவமாகும்.

இது நமது சட்டத்தை இயற்றியவர்களின் பார்வையிலும் படாமல் போய்விடவில்லை. அதனால்தான் அவர்கள் உழைப்பாளரை நலிவடைந்த பிரிவினராகக் கருதி சமூக நலத்தன்மை வாய்ந்த சட்டங்கள் சிலவற்றை இயற்றினர். பணபலம் உடைமை வர்க்கத்தினருக்கு உருவாக்கித் தரும் சாதக அம்சங்கள் அனைத்தையும் சரி செய்து உழைக்கும் வர்க்கத்தினரின் நலனை முழுமையாகப் பாதுகாக்க வல்லவையாக அச்சட்டங்கள் இல்லாவிடினும் சமத்துவத்தைப் பேண நாமும் சிலவற்றைச் செய்துள்ளோம் என்ற எண்ணப்போக்கைக் பிரதிபலிப்பவையாகாவது அச்சட்டங்கள் இருந்தன.
தொழிலாளர் சட்டங்களாகிய தொழிற்சங்கச் சட்டம், தொழில் தகராறுச் சட்டம், பணி நிரந்தரச் சட்டம், சம்பளப் பட்டுவாடாச் சட்டம் போன்றவை அத்தகைய சமூக நலத்தன்மை வாய்ந்த சட்டங்களாகும். அச்சட்டங்களின் அடிப்படை உழைக்கும் வர்க்கத்தை நலிவடைந்த பிரிவினராகப் பார்ப்பதும் அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சில சட்ட ரீதியான சலுகைகளை அவர்களுக்குக் வழங்குவதுமாகும். நிர்வாகங்கள் நினைத்தவுடன் நினைத்தபடி தொழிலாளர் மீது நடவடிக்கைகள் எடுப்பதை அச்சட்டங்கள் ஒரளவு கட்டுப்படுத்த முயன்றன.
ஒரு தொழிலாளி தவறு செய்கிறார் என்று நிர்வாகம் கருதினால் அதைத் தீர விசாரித்து அது தவறு என்று உறுதியாகக் கண்டு கொண்ட பின்னரே அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அச்சட்டங்கள் வலியுறுத்தின. நிர்வாகம் ஒரு ஊழியரைத் தற்காலப் பணி நீக்கம் செய்தால் அவருக்குப் பிழைப்பூதியம் வழங்க வேண்டும் என்பதை அச்சட்டங்கள் வலியுறுத்தின. ஆனால் நடைமுறையில் தொழிலாளருக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி வலியுறுத்தும் போது மட்டுமே இத்தகைய சட்டங்களும் அதன் ரத்துகளும் நிர்வாகங்களால் கண்டு கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையினை நடத்தும் ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிர்வாகம் இச்சட்டங்களையும் விதிகளையும் ஏறெடுத்தும் பார்க்காமல் ஊழியர்களை நடத்தியது. ஊழியர் பலரை வேலையைவிட்டுக் கூடத் துரத்தியது. இஷ்டப்படி நூற்றுக் கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள இடங்களுக்கு இடமாறுதல்கள் செய்து அவர்களைக் கொடுமைப் படுத்தியது. மிகக் குறைந்த சம்பளம் பெறும் அதன் ஊழியர்கள் நிர்வாகம் மாறுதல் செய்த இடங்களுக்கெல்லாம் செல்லவியலாது தவித்தனர். இக்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் என்றதொரு அமைப்பினை உருவாக்கித் தங்களது உரிமைக்குரலை உயர்த்தி எழுப்பினர். சங்கம் நிர்வாகத்தின் முறைகேடுகளைத் தட்டி கேட்டது; தொழிலாளரின் பிரச்னைகளையும் சேவையின் மேம்பாட்டையும் வலியுறுத்திப் பலப் பொது நிகழ்ச்சிகளை எடுத்தது. சட்ட பூர்வாகமாக தொழிலாளர் அலுவலகங்களில் பல தாவாக்களை எழுப்பியது. 108 தொழிலாளரின் பிரச்னைகள் நீதிமன்றக் கதவுகளையும் தட்டின. வெகுண்டெழுந்த நிர்வாகம் தொழிற்சங்க முன்னணி ஊழியர்கள் பலர்மீது பழிவாங்கும் தன்மை வாய்ந்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு திட்டமிட்ட விதத்தில் சங்கம் செயல்படத் தொடங்கி சட்ட மீறல்களைத் தட்டிக் கேட்கத் தொடங்கியவுடன் வேறு வழியின்றி வாய்மூலமாக அல்லாது எழுத்து மூலமாகக் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்குவது, பெயரளவிற்கேனும் விசாரணை நடத்துவது போன்றவற்றைச் செய்ய வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. பல மாதங்கள் அல்லது வருடங்களுக்கு முன்பு வேலை மறுக்கப் பட்டவர்களுக்கும் உள்விசாரணை என்ற அறிவிப்புகள் வெளியிடப் பட்டன. எங்கே சங்கத்தின் வழிகாட்டுதலினால் வேலை நீக்கம் போன்ற தங்களது நடவடிக்கைகளை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கைகளைக் காலதாமதமாக நிர்வாகம் மேற்கொள்கிறது. அதாவது தொழிலாளருக்கெதிரான தங்கள் நடவடிக்கைகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க உள்விசாரணை நாடகங்களைத் தற்போது நடத்தி வருகிறது.
உள்விசாரணைகளில் கண்ணின் கருமணிபோல் கடைப்பிடிக்கப் படவேண்டிய விசயம் இயற்கை நீதிப்படி அவற்றை நடத்துவதாகும். அதாவது விசாரணை நடத்தப்படும் ஊழியருக்கும் சமவாய்ப்புகள் அளித்து அவற்றை நடத்துவதாகும். அதாவது அவர்கள் தரப்புச் சாட்சியங்களை முன்வைப்பதற்கு முழுவாய்ப்பினைத் தருவதும் நிர்வாகத் தரப்புச் சாட்சியினரைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிப்பதும் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் அவர் உடன் பணிபுரிபவரையோ அல்லது அவரது சங்க நிர்வாகியையோ விசாரணையில் தனக்கு உதவ தன் உடன் வைத்துக் கொள்ள அனுமதிப்பதும் இயற்கை நீதியின் சில கூறுகளாகும். குற்றம் சாட்டப்பட்ட ஊழியருக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ள உரிய அவர் கோரும் கால அவகாசம் தருவதும் இயற்கை நீதிப்படி அவசியமானதாகும். மேலும் ஊழியர் தரப்புச் சாட்சிகளைக் கொண்டு வருவதற்கு ஏதுவாக விசாரணையைக் குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு மிக அருகாமையில் உள்ள நிர்வாக அலுவலகத்திலோ அல்லது வேறு இடத்திலோ நடத்துவதும் அத்தியாவாசியமாகும். மேலும் உள்விசாரணைக்கு ஆட்படுத்தப்படும் நிர்வாகத்தால் வேலை மறுக்கப்பட்ட ஒருவர் தற்காலிகப் பணி நீக்கத்தில் இருப்பவராகவே கருதப்படுவார். அதனால்தான பணி நீக்கமும் உள்விசாரணையும் ஒன்றிணைந்தவையாகவே எப்போதும் கருதப்படும். எனவே அவருக்கு பிழைப்பூதியம் வழங்குவதும் கட்டாயமாகும்.
ஆனால் உள்விசாரணையை உரியமுறையில் நடத்தாமல் அதனை ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக நடத்த விரும்பும் ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிர்வாகம் இயற்கை நீதிக் கண்ணோட்டத்தை  காற்றில் பறக்க விட்டுச் செயல்படகிறது. விசாரணைக்கு அழைக்கப்படும் ஊழியருக்குப் பணி மறுக்கப்பட்ட காலத்தை அது தற்காலிகப் பணி நீக்க காலமாகக் கருதிப் பிழைப்புதியம் தர மறுக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஊழியர் மீதான உள்விசாரணைகள் அனைத்தையும் அதன் தலைமையகமான சென்னையிலேயே வைத்து நடத்துகிறது. அதன்மூலம் ஊழியர் தரப்புச் சாட்சிகள் விசாரணையில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. கால அவகாசம் கோரும் ஊழியர்களின் கடிதங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் ஒருதலைப் பட்சமாக விசாரணையை நடத்தி அவற்றின் முடிவுகளை ஊழியர் மீது திணிக்கிறது. விசாரணைக்கு வரும் ஊழியருக்குப் பயணப்படி கொடுப்பதில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து விசாரணையில் அவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்விசாரணையைத் தன்னிச்சையாகவும், ஒருதலைப்பட்சமாகவும் கேலிக் கூத்தாகவும் ஆக்கி இயற்கை நீதிக் கண்ணோட்டத்தைச் சிதைத்துச் சின்னா பின்னாமாக்குகிறது. இவ்வாறு நடத்தப்படும் உள்விசாரணையின் முடிவுகள் நீதிமன்றங்களில் தோற்றுப் போய்விடும் என்பது ஒரு மூடனுக்குக் கூடத் தெரிந்த விசயமாக இருந்தாலும் அதில் கூச்சமின்றி நிர்வாகம் ஈடுபடக் காரணம் நீதிமன்றங்களில் எற்படும் கால தாமதம் தொழிலாளரைக் கொள்ளாமல் கொன்று விடும்; அதை அவர்கள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள் என்ற அதன் எண்ணமாகும்.
ஆனால் உழைக்கும் வர்க்க இயக்க வரலாற்றின் படிப்பினைகள் பாவம் இந்த நிர்வாகத்திற்குத் தெரியாது. உழைப்பாளரின் முன் அகலத் திறந்திருப்பது நீதிமன்றக் கதவுகள் மட்டுமல்ல மக்கள் மன்றக் கதவுகளுமாகும். இது போன்ற நடவடிக்கைகளில் கேள்வி கேட்பாரற்று நிர்வாகம் ஈடுபட்ட போக்கே ஆந்திர 108 ஊழியர்களை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தற்போது உந்தித் தள்ளியுள்ளது. இன்று ஆந்திராவில் தோன்றியுள்ள அந்த நிலை நிச்சயம் நாளை தமிழகத்தின் கதவுகளைத் தட்டும். உப்பைத் தின்றவர் அனைவரும் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிர்வாகம் இதற்கு விதி விலக்கல்ல.
இந்தப் பின்னணியில் ஊழியரின் பிற கோரிக்கைகளுக்காக 108 ஊழியர்களான நாம் நடத்தி வரும் போராட்டங்களோடு இயற்கை நீதி காக்கும் போராட்டத்தையும் இணைத்து எடுக்க நாம் உறுதி பூண்டுள்ளோம். ஜி.வி.கே நிர்வாகத்தின் இப்போக்கில் உள்பொதிந்துள்ள அபாயம் பிறதுறைத் தொழிலாளரின் கண்களையும் நிச்சயம் திறக்கும். அவர்களின் ஆதரவுக் கரம் நம்மை நோக்கி நீளும். அத்தகைய உழைக்கும் வர்க்க ஒருங்கிணைப்போடும் ஆதரவோடும் போராடுவோம். ஜி.வி.கே நிர்வாகத்திற்குப் பாடம் புகட்டுவோம்.
ஜி.வி.கே நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டம் 26.07.2013, மாலை 2 மணி முதல் 4 மணி வரை
தொடர்புக்கு:
தோழர் செந்தில், மதுரை. செல்:9944064460
- 108 ஆம்புலன்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன், தமிழ்நாடு

No comments:

Post a Comment